Friday, December 11, 2009

உயர்ந்த உள்ளம்

சில விஷயங்கள் நம் மனதை பாதித்துவிடும் அதில் இதுவும் ஒன்று



எச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளான 1000 குழந்தைகளை தத்தெடுக்கவிருப்பதாக நடிகர் கமல் ஹாசன் கூறினார்.

இன்று உலக எய்ட்ஸ் தினம். உலக அளவில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோரில் குழந்தைகள் அதிக அளவில் உள்ளனர். அவர்களுக்குத்தான் எச்.ஐ.வி. கிருமி பாதிப்பு வெகு சுலபமாக நடக்கிறது.

தமிழகத்தில் 2,651 குழந்தைகள் இந்த ஆண்டு புதிதாக எச்ஐவி தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர். இப்படிப்பட்ட குழந்தைகள் சமுதாயத்தால் புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது.

இந்த நிலையில், எச்ஐவி, எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக பெற்றால்தான் பிள்ளையா? என்ற ஒரு மாத கால பிரசார இயக்கத்தை `பாபுலேஷன் சர்வீசஸ் இன்டர்நேஷனல் என்ற அரசு சார்பற்ற அமைப்பும், ஹலோ எப்.எம். நிறுவனமும் இணைந்து இன்று தொடங்குகின்றன.

இந்த ஒரு மாத காலத்தில், ஹலோ எப்.எம்.மில், எச்.ஐ.வி-எய்ட்ஸ் நோயின் தீமைகளைப் பற்றி நேயர்களுக்கு எடுத்துரைக்கப்படும். அத்துடன், எச்.ஐ.வி-எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளை தங்கள் குழந்தைகள் போல கருதி, உதவ முன்வருமாறு பிரசாரம் செய்யப்படும்.

ஒரு குழந்தைக்கு ரூ.750 நன்கொடை அளிக்குமாறு நேயர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படும். நேயர்கள் அளிக்கும் ரூ.750 நன்கொடையை வைத்து, அந்த குழந்தையின் பெயரில் சுகாதார காப்பீடு எடுக்கப்படும். இது அக்குழந்தையின் எதிர்காலத்துக்கு பயன்படும்.

இந்த பிரசார இயக்கத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் எச்ஐவி- எய்ட்ஸ் பாதித்த ஆயிரம் குழந்தைகளை தத்து எடுப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் கூறுகையில்,

குழந்தைகள்தான் நமது எதிர்காலம். ஆனால் அவர்களில் சிலர் நம்பிக்கையின்மையின் பிடியில் சிக்கி இருப்பது கவலை அளிக்கிறது. அவர்களுக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளிப்பது நமது கடமை, பொறுப்பு.

ஆகவே, இந்த பிரசார இயக்கத்துக்கு தலைமை தாங்குவது எனக்கு ஆழ்ந்த திருப்தி அளிக்கிறது. என்னை பின்பற்றி பலரும் இந்த சேவையை செய்வார்கள் என்று நம்புகிறேன்.

என்னை விட சிறந்தவர்களும், வசதியானவர்களும் இருக்கிறார்கள். நான் ஒரு இயக்கத்தை மட்டுமே தொடங்கி இருக்கிறேன் மற்றவர்கள் இதை முன்னெடுத்து செல்வார்கள் என்று நம்புகிறேன்.

இந்த பிரசார இயக்கத்தை தொடங்கி உள்ள ஹலோ எப்.எம்.மையும், பிஎஸ்ஐ அமைப்பையும் பாராட்டுகிறேன் என்றார்.

Tuesday, December 1, 2009