Friday, March 13, 2009
நோய்களைக் குணப்படுத்தும் நகைகள்
நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத்தான் அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை... அதில் மருத்துவ ரீதியான பலன்களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். ‘‘குறிப்பாக, இது நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது...!’’ என்கிறார் கோவை கே.ஜி. மருத்துவ மனையின் அக்குபஞ்சர் துறை டாக்டர் சி.வி. அருணா சுபாஷினி.. அவர் சொன்னார்... ‘‘நம் உடலின் இரத்த ஓட்டத்தை ஏந்திச் செல்ல குழாய்களும், அதற்கான பாதைகளும் இருப்பது போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. ‘நாடி ஓட்டப் பாதை’ என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் சொல்வோம். நாடிகளும், நரம்புகளும் முக்கிய இடங்களில் ஒன்று சேர்வதை வர்மப் புள்ளிகள் என்கிறோம். இந்த மாதிரி புள்ளிகள் இந்தப் பாதைகளில் ஏராளமாக உள்ளன. குறிப்பிட்ட அளவு தூண்டுதலை இந்தப் புள்ளிகளில் ஏற்படுத்துவதன் மூலம் அரிய மருத்துவ சிகிச்சையே நம் உடம்பில் நடைபெறும். இதுதான் அக்குபஞ்சர் என்னும் சீனப் பாரம்பரிய மருத்துவம்! பெயர்தான் இது சீன மருத்துவமே தவிர, உண்மையில் இது தோன்றியது இந்தியாவில்தான். இராமதேவர் என்ற சித்தர்தான் இதை சீனா வரை கொண்டு சேர்த்தவர். அங்கு இன்று இந்த மருத்துவத்துக்கு என்று தனி யூனிவர்சிட்டியே உள்ளது. உலகின் பல இடங்களுக்கும் இதை பரவச் செய்து வருகிறார்கள். இந்த வர்ம புள்ளிகள், கை, கால், மற்றும் உள்ளங்கை, உள்ளங்காலில் தான் அதிகப்படியாக உள்ளதால் இவற்றைத் தூண்டும் விதமாகவே நாம் வெறும் காலால் நடந்து மலைக் கோயிலுக்கு செல்வது, கல்லும் முள்ளும் குத்துவதை காலுக்கு மெத்தை என விருப்பமாக பக்தியுடன் ஏற்றுக் கொள்வது, காது குத்தி தோடு அணிவிப்பதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்வது என்று நமது முன்னோர்கள் இந்த அருமையான அக்குபஞ்சர் வைத்தியத்தை நமது வாழ்க்கையுடனே இணைத்து விட்டார்கள். இது போன்ற ஆபரணங்களில் நாம் பெரும்பாலும் தங்கத்தை உபயோகிப்பதற்கும் கூட காரணம் இருக்கிறது. தங்கம் உடம்பைத் தொட்டபடி இருந்தால் நம் உடலின் தேஜஸ் அதிகரித்து அழகு மிளிரும்! நாம் போடுவது தங்கமோ, வெள்ளியோ அல்லது சாதாரண மெட்டலோ எதுவாக இருந்தாலும், அந்த ஆபரணம் என்பது நம் உடலின் அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டித்தான் விடுகிறது. அதற்காகவாவது, இனி நாம் நகைகளைப் போடுவோம். இதனால் பல வியாதிகள் கட்டுப்படட்டும்!
Subscribe to:
Post Comments (Atom)
ஆமாங்க....
ReplyDeletevery fine
ReplyDelete