Monday, March 9, 2009

ஆன்மீக மனிதன்

ஆன்மீக மனிதனின் பரிணாமம்!
மறைபொருள் ஞானமும் ஆற்றல்களும் ஆபத்தான கவர்ச்சிகள், சிக்க வைக்கும் தடைகள் எனத் தள்ளிவிட்டு ஆன்மீக அனுபவம் ஆத்மாவின் தூய உண்மையை மட்டுமே நாடியுள்ளது. தத்துவ ஞானத்தைத் தள்ளிவிட்டு அதற்குப் பதிலாக இதயத்தின் ஆர்வத்தின் மூலம் அல்லது உள்நோக்கிய ஆன்மிக மாற்றத்தின் மூலம் இலட்சியத்தை அடைந்துள்ளது. எல்லா சமயக் கொள்கைகளையும் வழிபாட்டு முறைகளையும் தாழ்ந்தபடியில் உள்ளவை அல்லது ஆரம்ப அணுகுமுறை எனக்கருதி அவற்றைப் பின்னால் தள்ளிவிட்டு, இவற்றின் துணை எதையும் விரும்பாமல் ஆன்மிக மெய்மையின் தொடர்பு ஒன்றையே நாடிச் சென்றுள்ளது. webdunia photo WD - ஸ்ரீ அரவிந்தர் உள் ஜீவனைத் திறக்கும் தனது முயற்சியில் இயற்கை முதன்மையாக நான்கு வழிகளைப் பின்பற்றியுள்ளது - சமயம், மறைபொருள் ஞானம் (occultism), ஆன்மகச் சிந்தனை, அக ஆன்மிக அனுபூதியும் அனுபவமும். முதல் மூன்றும் அணுகுமுறைகள், இறுதியாக வருவது முடிவான நுழைவாயில். இந்த நான்கு ஆற்றல்களும் ஒரே சமயத்தில் வேலை செய்துள்ளன, சிறிய அளவிலோ பெரிய அளவிலோ ஒன்றோடென்று தொடர்பு கொண்டும், சில சமயங்களில் அடிக்கடி மாறக்கூடிய ஒத்துழைப்புடனும், சில சமயங்களில் ஒன்றோடென்று வாதிட்டுக் கொண்டும், சில சமயங்களில் தனித்தனியே பிரிந்தும் வேலை செய்துள்ளன. சமயம் அதன் சடங்குகளில், கிரியைகளில் மறைஞான அம்சங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. அது ஆன்மிகச் சிந்தனையைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. சில சமயங்களில் அதிலிருந்து ஒரு சமயக் கோட்பாட்டை உருவாக்கியுள்ளது. சில சமயங்களில் அதற்கு ஆதாரமான ஆன்மிக தத்துவக் கொள்கையைப் பெற்றுள்ளது. பொதுவாக மேற்கு நாடுகள் முதலில் சொன்ன முறையையும் கிழக்கு நாடுகள் இரண்டாவது முறையையும் பின்பற்றியுள்ளன. ஆனால் ஆன்மிக அனுபவமே சமயத்தின் இறுதி இலட்சியமும் சாதனையும் ஆகும். அதுவே அதன் விண் சிகரம். ஆனால் சில சமயங்களில் சமயம் மறைபொருள் ஞானத்தைத் தடை செய்துள்ளது அல்லது மிகவும் குறைத்துள்ளது. அது தத்துவ ஞான மனத்தை வரட்டு அறிவுள்ள அந்நிய ஒன்றாக ஒதுக்கியத்தள்ளியும் இருக்கிறது. பிடிவாதமான கொள்கை, சமயப்பற்றுடைய உணர்ச்சி வேகம், நன்னடத்தை இவற்றிற்கே எல்லா முக்கியத்துவத்தையும் கொடுத்துள்ளது. ஆன்மிக அனுபூதியையும் அனுபவத்தையும் தேவையில்லாததாக ஒதுக்கியுள்ளது அல்லது மிகச்சிறிதளவே வைத்துக் கொண்டுள்ளது. மறைபொருள் ஞானம் சில சமயங்களில் ஆன்மிக நோக்கத்தைத் தனது இலக்காக வைத்துள்ளது. மறைபொருள் ஞானத்தையும் அனுபவத்தையும் அதற்குரிய அணுகுமுறையாக வைத்துள்ளது. ஒரு வகையான மறைஞான தத்துவத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் பெரும்பாலும் அது ஆன்மிகப் பார்வையில்லாமல் மறை பொருள் ஞானம், அதைப் பழகுதல் என்னும் அளவிலேயே நின்றுவிடுகிறது, அது மாந்திரீகம் அல்லது வெறும் மாயவித்தை இவற்றை நோக்கியும் சென்றுள்ளது, வழி தவறி சூனியம் செய்வதற்குக் கூட போயிருக்கிறது.

No comments:

Post a Comment